சென்னை புழல் அருகே இருக்கும் லட்சுமிபுரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் விவேக்குமார். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதியினருக்கு சாய்சரண் என்கிற ஆறு மாத கைக்குழந்தை இருக்கிறது.

இவர்களின் வீட்டின் அருகே ஆகாஷ் என்கிற வாலிபர் வசித்து வருகிறார். ஆகாஷின் பெற்றோர் வெளியே செல்லும் போது, வீட்டு சாவியை விவேக்குமார் வீட்டில் கொடுத்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் வீடு சாவியை ப்ரியாவிடம் ஆகாஷின் பெற்றோர் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

கஞ்சா போதையில் இருந்த ஆகாஷ் தனது வீட்டு சாவியை ப்ரியாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ப்ரியா தன்னிடம் சாவி இல்லை என்று கூறியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த ஆகாஷ் ப்ரியாவின் கையிலிருந்த  குழந்தை சாய்சரணின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனால் குழந்தை வலியில் அலறி துடித்துள்ளது. தடுக்க வந்த ப்ரியாவையும் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தநிலையில் ஆகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர்கள் உடனடியாக குழந்தை சாய்சரணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விவேக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய ஆகாஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.