சென்னை கூவம் ஆற்றில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபரின் சாவு தொடர்பாக ஆந்திர மாநில ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பேசின்பாலம் கூவம் ஆற்றில் வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக கடந்த 8ம் தேதி ஏழுகிணறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது காரில் வந்த சிலர் சடலத்தை கூவத்தில் வீசி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கார் பதிவெண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணக்கு பிறகு ஆந்திர மாநிலத்தின் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவை சேர்ந்த சந்திரபாபு (35). மனைவி வினுதா கோட்டா (31), ஜனசேனா கட்சி ஐடி பிரிவு கோபி (24), ஓட்டுநர் ஷேக் தாசர் (23) உள்ளிட்ட 5 பேர் கைது செய்த போலீசார் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீகாளஹஸ்தி, பக்சிம்பாலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு (எ) ராயுடு (22) என்பது தெரியவந்தது. அவர் 2019 முதல் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியை சேர்ந்த பிரதிநிதி சந்திரபாபு மற்றும் வினுதா கோட்டாவின் வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் வினுதா கோட்டா தனது படுக்கையறையில் உடை மாற்றும்போது ஸ்ரீனிவாசலு தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை அறிந்த ஆத்திரமடைந்த சந்திரபாபு ஸ்ரீனிவாசலுவிடம் அடித்து உதைத்து விசாரித்துள்ளார்.
அப்போது ஜனசேனா கட்சியின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ பஜாலா சுதீர் ரெட்டியின் ஆதரவாளரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வினுதா கோட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோவை அனுப்பியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஜூன் 21ம் தேதியன்று ஸ்ரீனிவாசலு எச்சரிக்கப்பட்டு, அவரது பாட்டி ராஜேஸ்வரியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சமீபத்தில் சந்திரபாபு மற்றும் வினுதா மீண்டும் ஸ்ரீனிவாசலுவை வரவழைத்து 4 நாட்கள் சட்டவிரோதமாக வீட்டில் கட்டி வைத்து, அடித்து, கட்சி ரகசியங்களை வெளியிட்டது குறித்து விசாரித்தனர். பின்னர் ஸ்ரீனிவாசலுவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அரசியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் சந்திரபாபு எண்ணியுள்ளார்.
இந்நிலையில் தான் சந்திரபாபுவின் மாமனார் பாஸ்கர் ரெட்டிக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு காரில் செல்ல இருக்கும் தகவல் அவருக்கு கிடைத்துள்ளது. இதனால், யாருக்கும் தெரியாமல் ஸ்ரீனிவாசலு உடலை காரில் ஏற்றிக்கொண்டு சென்னை ஏழு கிணறு பகுதியில் உடலை கூவம் ஆற்றின் போட்டால் யாருக்கும் தெரியாமல் தண்ணீரில் அடித்துச் சென்று கடலில் போய் கலந்து விடும் என்று நினைத்து உடலை வீசியுள்ளனர். ஆனால் உடல் கரை ஒதுங்கியதால் வசமாக மாட்டிக்கொண்டனர். ஆந்திராவில் கொலை செய்து சென்னை கூவம் ஆற்றில் வீசியது தெரியவந்தது.
