சோமங்கலம் அருகே 6 ஆண்டுகளாக காதலித்த பெண் திடீரென பேச மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன், காதலியின் தந்தையை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம், கருணகரச்சேரி கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (55). இவரது மகள் சரண்யா (19). அதே பகுதி கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கபாலி. இவரது மகன் சதீஷ் (19).

லோகநாதனும், சதீஷும் ஆட்டோ டிரைவர்கள். இதனால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, லோகநாதனின் மகள் சரண்யாவை, கடந்த 6 ஆண்டுகளாக சதீஷ் காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம், சரண்யாவின் பெற்றோருக்கு தெரிந்தது. இதனால், கடந்த 6 மாதமாக அவர், சதீஷுடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சதீஷை செல்போனில் தொடர்பு கொண்ட சரண்யா, இனி என்னுடன் பேச வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் ஆத்திரமடைந்தார்.

இந்நிலையில், சரண்யாவின் தந்தை லோகநாதன், நேற்று காலை தனது லோடு ஆட்டோவில், மேட்டூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற சதீஷ், ஆட்டோவை மறித்து, அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லோகநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார்.

இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த லோகநாதனை மீட்டு, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்படி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சதீஷை தேடி வந்தனர். அப்போது, மேலத்தூர் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த சதீஷை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், கடந்த 2015ம் ஆண்டு சதீஷின் தந்தை, சரண்யாவை பெண் கேட்டு லோகநாதன் வீட்டுக்கு சென்றார். அப்போது, 18 வயது பூர்த்தி ஆகாததால் சரண்யாவின் உறவினர்கள், அவரது தந்தையை அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பழிக்குப்பழியாக சதீஷ், சரண்யாவின் தந்தையை கொலை செய்ய முயன்றார் என அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.