'புள்ளிங்கோ' என்கிற வார்த்தை தமிழகத்தில் தற்போது பெயர் பெற்றது. அரைகுறை ஆடையுடன், வித்தியாசமான தலை அமைப்புகளுடன், முடியில் கலர் டை அடித்து பார்ப்பவர்களை மிரளச் செய்யும் வகையில் பைக்கில் பறந்து செல்வார்கள், இந்த 'புள்ளிங்கோ' கெட் அப்பில் இருக்கும் இளைஞர்கள். சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். இந்த இளைஞர்கள் அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. ரேஸில் ஈடுபவர்களை மட்டுமின்றி எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் இந்த விபத்தில் சிக்கி மரணமடையும் சம்பவங்களும் நடந்திருக்கிறது. 

இதன்காரணமாக பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்ததையடுத்து சில நாட்களாக பைக் ரேஸ் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் சென்னை பகுதிகளில் பைக் ரேஸ் நடப்பதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. சென்னை காமராஜர் சாலை, அண்ணாசாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா மேம்பாலம், ஜி.எஸ்.டி. சாலை, சர்தார் பட்டேல் சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் பைக்கில் தாறுமாறாக சென்று ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து குறிப்பிடப்பட்ட சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை நடந்தது.

அப்போது அதிவேகமாக பைக்கில் சென்று ரேஸில் ஈடுபட்ட 158 இளைஞர்களும் அவர்களின் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 126 மீது இருசக்கர வாகனத்தில் தாறுமாறாக வந்து பொதுமக்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மற்ற 32 பேர் மீதும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் முகமூடி அணிந்து இளம்பெண் ஒருவரும் கைதாகி இருக்கிறார். வழக்கு பதியப்பட்டிருக்கும் பெரும்பாலானோர் பள்ளி,கல்லூரி மாணவர்களாக உள்ளனர்.

அடுத்த சில தினங்களில் புது வருடம் பிறக்க இருப்பதால், அதுவரையிலும் காவல்துறையினரின் வாகன சோதனை இனி தீவிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.