ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே இருக்கும் ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரம்யா. வேலை சம்பந்தமாக இருவரும் சென்னை வந்திருக்கும் நிலையில் ரம்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். வேலை முடிந்ததும் சொந்த ஊர் செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இருவரும் வந்தனர். ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய ரயில் மறுநாள் காலையில் தான் இருந்திருக்கிறது. இதனால் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருவரும் படுத்து உறங்கி உள்ளனர்.

அப்போது நள்ளிரவில் ரம்யாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாத நிலையில் அவரது கணவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் அவரை எழுப்பாமல் தனக்குத்தானே ரம்யா பிரசவம் பார்த்துள்ளார். அவருக்கு அழகான பெண் குழந்தை நல்லபடியாக பிறந்துள்ளது. பின்னர் தொப்புள் கொடியையும் அவரே அறுத்துள்ளார்.

தூங்கி எழுந்த வெங்கடேஷ் தனக்கு குழந்தை பிறந்து இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். இதையடுத்து அங்கு ரோந்து பணிக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் குழந்தை பிறந்த விஷயம் அறிந்து உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் ரம்யாவுக்கும் குழந்தைக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. தாயும் சேயும் தற்போது நலமாக இருக்கின்றனர்.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இளம்பெண் ஒருவர் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.