சென்னை திருமுல்லைவாயல் அருகே கணவரை பயமுறுத்துவதாக நினைத்து விளையாட்டாக உடலில் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்த அனிதா என்ற இளம்பெண் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

 

இந்நிலையில், அனிதாவின் தந்தை இறந்து போனதால் கடந்த சில மாதத்திற்கு முன்பு அனிதா தன் கணவருடன் தாய் வீட்டிலேயே தங்கி உள்ளார். இதனிடையே, வினோத்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அனிதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், அனிதா மன வருத்தத்துடன் இருந்து வந்தார். 

இந்நிலையில், தன் கணவரை பயமுறுத்துவதற்காக தன்மீது எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போல அனிதா நடித்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அனிதா உடலில் தீப்பிடித்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அனிதா நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் அமுதா பரிதாபமா உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.