ராயல் என்பீல்டு ஷோரூமில் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிக்ஸ் பிப்டி என்ற புல்லட்டை ஓட்டிப்பார்ப்பதாக கூறி இளைஞர் ஒருவர் திருடிச்சென்று விட்டார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் ஷோரூமில் புதிதாக வந்திருக்கும் புல்லட்டை விலைக்கு வாங்குவது போல பார்வையிட்டுள்ளார் டிப்டாப் இளைஞர் ஒருவர். தன்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சோபியான் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இளைஞர், புதிய மாடல் சிக்ஸ் பிப்டி புல்லட்டை ஓட்டி பார்க்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

ஓட்டுனர் உரிமத்தை பிணையாக வாங்கி வைத்துக் கொண்டு 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய புல்லட் ஒன்றை ஓட்டிப் பார்க்க கொடுத்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அந்த அந்த இளைஞர் திரும்பி வராததால் வெளியில் காத்திருந்த ஷோரூம் ஊழியர் ஏமார்ந்ததை  உணர்ந்தார்.

இது குறித்து, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அவனது ஓட்டுனர் உரிமத்தை ஆய்வு செய்தபோது அது டூப்ளிகேட் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஷோரூமில் உள்ள சிசிடிவி காட்சியை வைத்து விசாரித்த போது புதிய புல்லட்டுடன் தலைமறைவான அந்த இளைஞன் வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபல கார் திருடன் சோபியான் என்பதும் அவன் மீது ஏற்கனவே 34 சொகுசு கார்களை திருடிய வழக்கு உள்ளதாகவும் 12 முறை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது. 

சினிமாவில் வரும் வடிவேலுவின் காமெடிக் காட்சிபோல ஓட்டிப் பார்ப்பதாக கூறி, புதிய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவான இளைஞரை காவல்துறையினர் வலைவீசித் வருகின்றனர்.