குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தூங்கி கொண்டிருந்த சென்டரிங் தொழிலாளி ஒருவரை சக தொழிலாளியே அடித்து கொலை செய்த சம்பவம் ராயப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராயப்பேட்டை தெய்வசிகாமணி சாலையில் தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான புதிய குடியிருப்பின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே சிறிய குடிசை அமைத்து தங்கி வேலை செய்து செய்து வருகின்றனர்.

இவர்களில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பஞ்சாலம் வான் நல்லாளர் கிராமத்தை சேர்ந்த செல்வம் (20), கடலூர் மாவட்டம் திட்டக்குடி புதிய காலனியை சேர்ந்த முல்லை நாதன் (22) ஆகியோர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று மதியம் அனைவரும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது செல்வம் போதையில் முல்லைநாதனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இருவரையும், உடன் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் விலக்கி விட்டனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளனர்.

பிறகு அனைவரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினர். அப்போது முல்லைநாதன் மதியம் நடந்த பகையை மனதில் வைத்துக் கொண்டு, அங்கிருந்த இரும்பு ராடால், தூங்கிக் கொண்டிருந்த செல்வத்தின் தலையில் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். பிறகு இரவோடு இரவாக அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

வழக்கமாக நேற்று காலை கட்டுமான மேஸ்திரி வினோத் எழுந்து அருகில் உள்ள குடிசையில் தூங்கி கொண்டிருந்த செல்வத்தை எழுப்ப வந்துள்ளார். அப்போது, செல்வம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அருகில் இரும்பு ராடு ஒன்றும் ரத்த கறையுடன் கிடந்தது. முல்லைநாதனை தேடியபோது அவர் மாயமானது தெரிந்தது.

இதுகுறித்து கட்டுமான மேஸ்திரி வினோத் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிவு ெசய்து தலைமறைவாக உள்ள முல்லைநாதனை, அவனது செல்போன் சிக்னல் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். குடிபோதையில் நடந்து தகராறில் சென்டரிங் தொழிலாளி ஒருவரை சக தொழிலாளியே அடித்து கொலை செய்த சம்பவம் ராயப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.