மணலி புதுநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 2 மற்றும் காந்திநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி இப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன், லாரியில் மதுபாட்டில்களை கொண்டு வந்து, புதிதாக திறக்கப்பட உள்ள கடையில் வைக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த பெண்கள் மேற்கண்ட கடைக்கு வந்தனர். பின்னர், ‘‘குடியிருப்பு பகுதி அருகே புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க கூடாது,’’ என கோஷமிட்டபடி, கடை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மணலி புதுநகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதை அறிந்த பெண்கள் மீண்டும் அந்த கடையின் முன் போராட்டம் செய்ய ஒன்று கூடினர். இதனால் மதியம் கடையை திறக்காமல் மதுபான கடை ஊழியர்களும் போலீசாரும் கிளம்பி சென்றனர்.