திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ்(40). இவரது மனைவி தேவி(35). ராமதாஸ் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சென்னை பூந்தமல்லி அடுத்து இருக்கும் குமணன் சாவடியில் இவர்கள் வசித்து வருகின்றனர். 

நேற்று ராமதாசும் அவரது மனைவியும் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். நசரத்பேட்டை அருகே சாலையில் பள்ளம் இருந்திருக்கிறது. மழை பெய்ததால், அந்த பள்ளம் நீரால் நிரப்பி, வெளியே தெரியாத வண்ணம் இருந்துள்ளது. ராமதாசும் அவரது மனைவியும் வந்த வாகனம் எதிர்பாராத விதமாக அந்த பள்ளத்தில் இறங்கியுள்ளது. அதில் நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

அந்த நேரத்தில் பின்னால் ஒரு கண்டைனர் லாரி வந்திருக்கிறது. அது கீழே விழுந்த தேவி மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தேவி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமதாஸ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தன் கண் முன்னே மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு ராமதாஸ் கதறி துடித்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார்.  அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பினர். விரைந்து வந்த பூந்தமல்லி காவலர்கள், தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.