சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டிவருகிறார். வழக்கம் போல இன்று அதிகாலையில் சவாரிக்கு சென்றுள்ளார். சென்னை சென்ட்ரலில் இருந்து மூலக்கொத்தளம் நோக்கி பயணி ஒருவரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் வந்துள்ளார்.

அதிகாலை நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால், காளியப்பன் ஆட்டோவை அதிவேகத்தில் ஒட்டியதாக கூறப்படுகிறது. ப்ளூ ஸ்டார் ஹோட்டல் அருகே வந்த போது, திடீரென சாலையின் குறுக்கே இரண்டு நாய்கள் ஓடியுள்ளது. இதனால் பதறிய காளியப்பன், நாய்கள் மீது மோதாமலிருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். அதில் நிலைதடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் ஏறி இறங்கியிருக்கிறது.

இதில் அஞ்சலி என்கிற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த யானைக்கவுனி காவலர்கள் உயிரிழந்த அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் காளியப்பனை கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.