சென்னை ஆவடி அருகே இருக்கும் திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் மதன். இவரது மனைவி அமுதரசி(40). கணவன் மனைவி இருவரும் எட்டியம்மன் நகரில் இருக்கும் வீட்டில் வசித்த வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அமுதரசி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் திருமுல்லைவாயிலில் இருக்கும் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக மதன் அழைத்துச் சென்றுள்ளார். எனினும் அவருக்கு காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது. இதன்காரணமாக போரூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அமுதரசி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் அவரை கவனித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அமுதரசி பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, வைரஸ் போன்ற காய்ச்சல்கள் பரவி வருகிறது. அரசு சார்பாக தமிழகம் முழுவதும் சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களும் தங்கள் இருப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.