சென்னை செங்குன்றம் அடுத்த காரனோடையில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி மாநகர பஸ் (தடம் எண் 57எப்) நேற்று காலை புறப்பட்டது. மூலக்கடை அருகே வந்தபோது, பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் திடீரென தனது செல்போனை காணவில்லை என கூச்சலிட்டார்.

உடனடியாக எருக்கஞ்சேரி பகுதியில் பஸ்சை நிறுத்தி, அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் செல்போன் திருடுபோன விவரத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து ஒவ்வொரு பயணியாக போலீசார் சோதனை நடத்தியபோது தண்டையார்பேட்டை லட்சுமியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவர், பெண்ணிடம் செல்போனை திருடியது தெரியவந்தது.

பின்னர் அவரை கொடுங்கையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து பெண்ணிடம் ஒப்படைத்தனர். சிவக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.