மாமல்லபுரம் அருகே கணவர் பிரியாணிக்கு பதில் குஸ்கா வாங்கி வந்ததால் விரக்தியடைந்த மனைவி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகேயுள்ள கடம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த மனோகரன்(32), மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சிற்ப கலைக்கூடத்தில் சிற்பியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு, மணமை என்ற கிராமத்தை சேர்ந்த சௌமியாவை(28) திருமணம் செய்துகொண்டார். மனோகர் - சௌமியா தம்பதிக்கு 10 வயதில் விஜயசாரதி என்ற மகனும் 11 வயதில் சொர்ணா என்ற மகளும் உள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி என்ற இடத்தில் வாடகை வீட்டில் இந்த குடும்பம் வசிக்கிறது. இந்நிலையில், தனக்கு பிரியாணி சாப்பிட ஆசையாக இருந்ததால், கணவரிடம் பிரியாணி வாங்கி வருமாறு கூறியுள்ளார். பிரியாணிக்காக பணமும் கொடுத்துள்ளார் சௌமியா. ஆனால் மனோகரன் பிரியாணிக்கு பதிலாக குஸ்கா வாங்கி சென்றுள்ளார். 

வீட்டிற்கு சென்று மனைவியிடம் குஸ்காவை வழங்கியுள்ளார். பிரியாணி வாங்காமல் குஸ்கா வாங்கி வந்ததற்காக தனது அதிருப்தியையும் கோபத்தையும் கணவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். கோபத்தில் அந்த குஸ்காவை சாப்பிடவில்லை. அப்போது, கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனோகரன் வீட்டை விட்டு வெளியே சென்றபின்னர், வீட்டு மாடியில் தீக்குளித்தார். அதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சௌமியா உயிரிழந்தார். 

இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.