கொரோனாவால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கொரோனாவிற்கு பயந்து அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள சூழலில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் சுயநலமின்றி மக்கள் நலனுக்காக களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாவது தடுக்க முடியாத ஒன்றாகிறது. 

அந்தவகையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்துவரும் 47 வயது பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்களை பரிசோதித்ததில், 3 வயது குழந்தை, 30 வயது ஆண், 25 வயது பெண் உட்பட மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

மக்களுக்காக களப்பணியாற்றிய தூய்மை பணியாளருக்கும், அவரது குடும்பத்தில் மற்ற 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.