புல்புல் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் இது தமிழகத்திற்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மிதமானது முதல்  சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி  அதற்கு புல்புல் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.   இதனால் அதிவேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும்  அதற்கு அடுத்த 36 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடல் பகுதிகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது அடுத்த சில மணி நேரங்களில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் பரவலான மழை பெய்யக்கூடும் என்றும்.  ஒரிசாவில் 9 மற்றும் 10-ம் தேதிகளில் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயலை ஒரிசா அரசு மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

 அத்துடன்  இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  அதேநேரத்தில் அரபிக் கடலில் மையம்  கொண்டுள்ள மஹா புயல் படிப்படியாக  வலுவிழந்து  வருவது குறிப்பிடத்தக்கது.