பொங்கல் திருநாள் விடுமுறையின் போது பிரதமர் மோடியின்  ‘பரிஷ்கா பி சார்ச்சா’ நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகைக்காக ஜனவரி 11 (சனிக்கிழமை) முதல் 19 (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை அளிக்கப்படுமா அல்லது 13 - 19 வரை விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16 அன்று டெல்லியில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘பரிஷ்கா பி சார்ச்சா’ எனும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய அரசின் பிரத்யேக யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்பட உள்ளன. 


இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக் கல்வித் துறை, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், தமிழகத்தில் ஜனவரி 14 முதல் 19 வரை பள்ளிகள் பொங்கல் பண்டிகைக்காக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் ஜனவரி 16 அன்று திறக்கப்படுமா என்ற கேள்வியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மாணவர்கள் அதற்கு முன்பே சென்றுவிடுவார்கள் என்பதால். மாணவர்கள் பள்ளியில் செய்யப்பட உள்ள நேரலையை எப்படிக் காண்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்விதுறை உரிய விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.