சென்னையில் திருமணமான 3 மாதத்தில் மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் பசும்பொன் நகரில் வசித்து வருபவர் அய்யனார் (31). இவரது மனைவி அஞ்சலி (21). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் ஆகிறது. இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரது கணவர் அய்யனாரும் திடீரென மாயமாகி இருந்தார். இதனையடுத்து, நீண்ட நேரமாகியும் வீடு திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்த போது படுக்கை அறையில் அஞ்சலி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அஞ்சலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் திருமணமான முதலே அய்யனாருக்கும் அஞ்சலிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

மேலும், அய்யனார் உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனைவி அஞ்சலியை அழைத்துள்ளார். ஆனால், அவர் உடன் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த அய்யனார் மனைவி அஞ்சலி கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அய்யனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.