தற்போது தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி வகிக்கிறார். கடந்த 2016 டிசம்பரில் தலைமை செயலாளராக பொறுப்பேற்ற இவர், வரும் 30ல் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை செயலாளரை நியமிக்கும் ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தியது.

இந்த பட்டியலில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது நிதித் துறை கூடுதல் தலைமை செயலாளராக உள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் இருந்தே சண்முகம் நிதித்துறை செயலாளர் பொறுப்பை கவனித்து வருகிறார். கிரிஜா வைத்தியநாதன் 2017 டிசம்பரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரது பொறுப்பை கூடுதலாக சண்முகம் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் செயலாளராக உள்ள செந்தில்குமாரிடம் நிதித்துறை செயலாளர் பொறுப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல சட்டம் ஒழுங்கு பிரிவு புதிய டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.