நின்ற கோலத்தில் வெள்ளை மற்றும் நீலம் நிற பட்டு உடுத்திய அத்திவரதரை, நேற்று ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி, வரும் 17ம் தேதிவரை நடக்கிறது. வைபவம் தொடங்கிய நாள் முதல் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து கடந்த 36 நாட்களில் சுமார்  51  லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்து சென்றனர்.

பக்தர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசனம் செய்ய, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், குடியரசுத் தலைவர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்தி வரதர் நேற்று வெள்ளை மற்றும் நீலநிறம் கலந்த பட்டு உடுத்தி  பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதிகாலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் காஞ்சிபுரத்தின் எல்லைகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வெளியூரில் இருந்து வரும் கார், பஸ் உள்பட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கிருந்து அத்திவரதரை தரிசிக்க இணைப்பு பஸ்கள் மூலம் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி புறவழிச்சாலை பகுதி, வெள்ளைகேட் பகுதி, பொன்னேரிக்கரை, செவிலிமேடு ஆகிய பகுதிகளில் வெளியூர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

நேற்று முன்தினம் கட்டுக்கடங்காத பக்தர்கள் வருகையால் அத்திவரதர் தரிசனம் நள்ளிரவு வரை தொடர்ந்து நீடித்தது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

அத்தி வரதர் தரிசனம் முடிய இன்றோடு 11 நாட்கள் மட்டுமே இருப்பதால் எதிர்வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கக் கூடும். மேலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அத்திவரதர் வைபவம் விவிஐபி பகுதி நுழைவாயிலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற காவலர் பாதுகாப்பு பணியில் நேற்று ஈடுபட்டார். மதியம் 12 மணியளவில் அவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக காவலர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவ உதவி மையத்துக்கு அனுப்பினர். அங்கு காவலர் செந்தில்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அலைஅலையாக திரண்டு வருவதால் நிலைமையை சமாளிக்க நகர எல்லைகளில் பக்தர்கள் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து பாலாறு வரை சுமார் 2 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதேபோன்று செவிலிமேட்டில் இருந்து பாலாற்றைக் கடந்து புஞ்சை அரசன்தாங்கல் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து வந்த ரத்தினம் (68) என்ற மூதாட்டி, குழுவாக வந்த வாகனமும் ஒலிமுகமதுபேட்டை தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து ஆட்டோ மூலம் அத்திவரதரை தரிசிக்க சென்றனர்.

செல்லும் வழியில் கச்சபேஸ்வரர் கோயில் அருகே மூதாட்டி ரத்தினத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே, அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூதாட்டி ரத்தினம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.