தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் இயந்திரத்தின் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் நூறடி வரை குழி தோண்ட முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. சுஜித் விழுந்துள்ள ஆழ்துளை கிணற்றுக்கு மூன்று மீட்டர் தொலைவில்  ஆள் இறங்கும் அளவிற்கு குழி தோண்டப்பட்டு வருகிறது.  இதில் சுமார் 25 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மற்றும் ஆழ்துளைக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் மற்றொரு குழியும் தோண்டப்படுகிறது.  அதாவது குழி தோண்டுவதால் மண்சரிவு ஏற்படாது என நிபுணர்கள் உறுதி அளித்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே சுஜித்தின் கைகள் ஹேர்லாக் மூலம் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் 100 அடிக்கு கீழ் சுஜித் சரிய வாய்ப்பு இல்லை என தெரிகிறது.   நூறு அடிக்கு பள்ளம் தோண்டிய பிறகு அங்கிருந்து பக்கவாட்டில் பத்தடிக்கு சுரங்கம் தோண்டப்பட்டு பின்னர் சுஜித்தை மீட்க வேண்டும் எனவே இந்த பணியில் சுமார் 6 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடவுள்ளனர். அவர்களே குழந்தையை மீட்கவும் செய்யவுள்ளனர்.  அதாவது ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் உள்ளே இறங்கும் வீரர்கள் ஒரு மீட்டர் அகலத்திற்கு தோண்டப்படும் குழியில் இறங்கி சுஜித் சிக்கிக்கொண்டுள்ள பகுதிக்கு செல்ல உள்ளனர். அது சற்று சவாலான பணியாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது ஏன் என்றால் ஆக்ஸிஜன் சிலிண்டரை உடலில் கட்டிக் கொண்டு கடப்பாறையால் 10 அடி தூரத்திற்கு சுரங்கம் தோண்ட வேண்டும் என்பதே அதற்கு காரணம்.

  

ஆனாலும்  அங்குள்ள மண்ணின் தன்மையை பொறுத்து அந்த குழி தோண்டும் பணி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே குழி தோண்டும் பணியில் இடையில் பாறை சிக்கி உள்ளதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பணி இடைவிடாமல் தொடர்கிறது, இறுதியாக  குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் கண்ணதாசன், மணிகண்டன், திலீப்குமார், அபிவாணன், உள்ளிட்டோர் குழியில் இறங்க தயாராகி வருகின்றனர்.  சுஜித் மீட்பு பணியை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கவனித்து வரும் நிலையில் ஆங்காங்கே பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்  மணப்பாறை நடுகாட்டுப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள்  குவிந்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.