சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம். ஆனால், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தாலோ, பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஏடிஜிபி ரவி எச்சரித்துள்ளார்.

இந்திய அளவில் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக சென்னையில்தான் குழந்தைகள் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து, தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்படுகிறது. 

இதனையடுத்து, குழந்தைகளின் ஆபாசப்படங்கள் பார்ப்பதில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த வகை ஆபாச படம் பார்ப்பவர்களின் 3000 பேர் கொண்ட பட்டியல் தயாராக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் ஏடிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், முதல் கைதாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் 15 முறை பகிர்ந்ததாக திருச்சி காஜாப்பேட்டையைச் சேர்ந்த 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, கிறிஸ்டோபருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி கூறுகையில் "குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் வீடியோக்களை நோக்கத்துடன் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்டோபர் பகிர்ந்து வந்துள்ளது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ, ஐடி ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 

மேலும், அவர் கூறுகையில் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் எனத் தெரிவித்தார். அதேசமயம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தாலோ, பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை பாயும் எனத் எச்சரித்துள்ளார்.