மது போதையில் உல்லாசமாக இருந்தபோது ஏற்பட்ட தகராறில் மேற்கு வங்க பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, வட மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிங்கி (30). இவர், கணவரை பிரிந்து கிருஷ்ணா பகதூர் (26), என்பவருடன் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்த கிருஷ்ணா பகதூர், மாலையில் வீடு திரும்பியபோது, கழிவறையில் பிங்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன்பேரில், துணை கமிஷனர் முத்துசாமி, திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பிங்கி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கிருஷ்ணா பகதூரிடம் விசாரித்தபோது, கழிவறையில் வழுக்கி விழுந்து பிங்கி இறந்து இருக்கலாம் என தெரிவித்தார். சந்தேகத்தின் பேரில், போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, 2 வட மாநில வாலிபர்கள் பிங்கி வீட்டில் இருந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும், பிங்கியின் செல்போனில் கடைசியாக பேசியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த விகாஷ்சர்மா மற்றும் விகாஷ்குமார் ஆகிய 2 பேர், பிங்கியிடம் பேசியது தெரிந்தது. போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கணவரை பிரிந்த பிங்கி, கிருஷ்ணா பகதூர் என்பவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளனர். இவர், வசதியான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உடலில், ‘டாட்டூ’ குத்தும் வேலை செய்து வந்துள்ளார். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக உயர் ரக புடவைகளை வாங்கி வந்து அதனை விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்துள்ளார்.

இவரது வீட்டிற்கு அடிக்கடி வெளி மாநில வாலிபர்கள் வந்து செல்வதும், அவர்களுடன் பிங்கி மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது. சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த விகாஷ்குமார் மற்றும் விகாஷ் சர்மா ஆகியோருடன் சேர்ந்து பிங்கி மது அருந்தியுள்ளார்.

அப்போது, பிங்கியுடன் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதற்கு பணமும் கொடுத்துள்ளனர். மீண்டும் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளனர். ஆனால், அவர்களிடம் பணம் குறைவாக இருந்ததால் பிங்கி மறுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் பிங்கியை தாக்கி, உல்லாசமாக இருக்க முயன்றுள்ளனர். அப்போது பிங்கி கூச்சலிட்டதால் பயந்து போன அவர்கள், தலையணையால் பிங்கி முகத்தை அமுக்கி உள்ளனர். இதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் இறந்துள்ளார்.

பின்னர், சடலத்தை கழிவறை எடுத்துச் சென்று, தலைமை சுவற்றில் மோதி, வழுக்கி விழுந்தது போல் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர், என்பது தெரிய வந்தது.

இந்த கொலையில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.