சென்னை , புதுபெருங்குளத்தூர் குண்டுமேடு அண்ணா தெருவை சேர்ந்தவர் சேகர் (35) இவரின் மனைவி முத்துலட்சுமி (30) இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் துரைப்பாக்கம் - குரோம்பேட்டை 200 ரேடியல் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக தண்ணீர் லாரி ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்று கொண்டிருந்த சேகர் தண்ணீர் லாரி வேகமாக வருவதை அறிந்து ஓரமாக வண்டியை கொண்டு செல்ல முயற்சி செய்த போது தண்ணீர் லாரி சேகரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதை சற்றும் எதிர்பாராத சேகர் தம்பதியினர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த சேகரின் மனைவி முத்துலட்சுமி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. அதில் பலத்த காயம் அடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே கணவரின் கண் எதிரே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சேகர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

 விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரியின் ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தண்ணீர் லாரி ஓட்டுனரை  தேடி வருகின்றனர். 

நகரப்பகுதிகளில் மிக வேகமாக செல்லும் தண்ணீர் லாரியால் விபத்து ஏற்படுவது தொடர்கதை ஆகி உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.