தண்ணீர்ப் பற்றாக்குறையில் தமிழகம்தான் டாப்... புட்டுப் புட்டு வைக்கிறது மோடி சர்க்கார்!
நாட்டில் உள்ள 855 மாவட்டங்களிலும், 756 நகராட்சிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் இருந்துவருவதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 184 நகராட்சிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவிவருகிறது. தண்ணீருக்காக மக்கள் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. லாரி தண்ணீருக்காக மக்கள் தவமாய் தவம் இருக்கும் நிலையில் உள்ளனர். லாரி தண்ணீரின் விலை கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. என்றாலும், இந்த ஆண்டு பருவமழை பொய்க்காமல் பெய்தால்தான் நிலைமை சீரடையும் என்ற நிலையில்தான் தமிழகம் உள்ளது.
இந்நிலையில் நாட்டில் உள்ள 855 மாவட்டங்களிலும், 756 நகராட்சிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் இருந்துவருவதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளின் பட்டியலில் தமிழகத்தில் 184 நகராட்சிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதால் அப்பகுதிகள் வறட்சியில் சிக்கியிருப்பதாக அந்த அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ராஜஸ்தான் மாநிலம் உள்ளது.
மாவட்டங்களின் பட்டியலில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 35 மாவட்டங்கள் கடும் வறட்சியில் உள்ளன என்றும் கர்நாடகாவில் 18 மாவட்டங்களில் 57 நகராட்சிகள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட நகர்ப்புறங்களை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் நீர் சேமிப்பை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஜல்சக்தி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.