காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் பொன்னையா கூறினார். மேலும், 16ம் தேதி காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கலெக்டர் பொன்னையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவத்தில், நேற்று முன்தினம் (5ம் தேதி) மட்டும் அதிகபட்சமாக 3.2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் ஏறக்குறைய 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் தரிசனத்துக்காக நேற்று மட்டும் ஏறக்குறைய 25 ஆயிரம் தனியார் வாகனங்கள் காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளன. அத்திவரதர் தரிசனத்தில் அதிகபட்ச காத்திருப்பு 21 மணிநேரமாக இருக்கிறது. பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க 2 நாட்கள் கூட ஆகலாம்.

தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே உள்ள காத்திருப்பு மையங்களுடன் புதிதாக 3 காத்திருப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். பக்தர்கள் விரைவாக வெளியேற மக்கள் வெளியேறும் மேற்கு ராஜகோபுரம் வழி அகலப்படுத்தப்பட்டுள்ளது. அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டை படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு வரும்16ம் தேதி காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 16 மற்றும் 17ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். பொதுமக்கள் தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும்.

நிறைவு நாளான 17ம் தேதி மதியம் 12 மணிக்கு பொது தரிசன பாதையான கிழக்கு கோபுரவாயில் மூடப்படும். உள்ளே வரும் பக்தர்கள் மாலை 5 மணிக்குள் அத்திவரதரை தரிசித்துவிட்டு செல்லவேண்டும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.

அத்தி வரதரை தரிசிக்க வந்த காஞ்சிபுரம் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இரவு 7 மணிக்கு மேல் சென்னைக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 7500 போலீசாருடன், கூடுதலாக 4500 போலீசார் என மொத்தம் 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 17தேதி அத்தி வரதர் வைபவம் ஸ்ரீ அத்திவரதர்  அனந்தசரஸ் குளத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுவார்.

 

இவ்வாறு அவர் கூறினார்.