தமிழக மாணவ, மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த செயல் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. தமிழகத்தில் பாஜக கூட்டணியிலுள்ள அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தெரிவித்து வரும் நிலையில், நீட் தேர்வுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளது தேமுதிக.

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றதை அடுத்து, மருத்துவப் படிப்புக்கான தேர்வு தரவரிசைப் பட்டியலிலும் திருவள்ளுர் மாணவி ஸ்ருதி முதலிடம் பெற்றார். மேலும் அஸ்வின்ராஜ் இரண்டாமிடமும், இளமதி மூன்றாமிடமும் பிடித்தனர்.

இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்தும், அதுமட்டுமில்லாமல் சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை இந்த நீட் தேர்வு உருவாக்கியிருக்கிறது. பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர வேண்டிய நிலையை மாற்றி, இன்றைய நீட் தேர்வு முறை எந்த ஒரு நிர்வாக ஒதுக்கீடும் இல்லாமல் சாதாரண மாணவர்கள் கூட மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. எல்லாவற்றையுமே அரசியலாக பார்க்காமல் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டினுடைய வளர்ச்சி என்ற வகையில் சிந்திக்கவேண்டும்” என்று கூறி நீட் தேர்வுக்கு முழு ஆதரவையும் வழங்கியுள்ளார்.

தமிழக மாணவ, மாணவியர்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும் அவர்களுக்கு தமிழக அரசு முறையான கூடுதல் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினால் நீட் தேர்வில் இன்னும் அதிகமாக சாதிப்பார்கள் எனவும் குறிப்பிட்ட விஜயகாந்த், “தமிழக மாணவ, மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த செயல் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். தேசிய அளவில் ஒரே மாதிரியான கல்வி, ஒரே கேள்வித்தாள், ஒரே மாதிரியான மதிப்பீடு இருப்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், “நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு என்ற செய்தி வந்த அதே நாளில், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் பல ஆயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். எனவே இதை அரசியலாக்காமல், மாணவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் பொழுது இந்தியா முழுவதும் ஒரே திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தினால், தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை இடத்திற்கு வந்து, அதிக மருத்துவர்கள் வருங்கால தமிழ்நாட்டில் வருவார்கள்” என்றும்  வலியுறுத்தியிருக்கிறார்.