மறுசுழற்சி வசதி இல்லாத அடுக்குமாடி கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும் என்றும் மழைநீர் சேகரிப்பு வசதியை 3 மாதத்திற்குள் அமைக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார். 

உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு வேலுமணியால் முன்மொழியப்பட்டுள்ள ஒரு சேலஞ்ச் மிகவும் முக்கியமானது, இன்றியமையாதது. ஆம். அதுதான் மழைநீர் சேலஞ்ச். இந்த சவாலில் இன்று நீங்கள் பங்கேற்று வெற்றிபெற்றால் நாளைய நமது வாழ்வும், நமது சந்ததிகளின் வாழ்வும் வளமாகும். நலமாகும்! இந்த உன்னத நோக்கத்தை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு எடுத்து செல்லும் விதமாகவே மழை நீர் சவாலை தமிழர்களிடம் முன் வைத்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி.இதற்காகவே தமிழ்நாடு வாட்டர் வைஸ் என்ற இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவது தொடர்பான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி; சென்னை மாநகராட்சியில் 2.35 லட்சம் கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். 14 மாநகராட்சி, 121 நகராட்சிகளில் உள்ள 15.89 லட்சம் கட்டிடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 4.96 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். 528 பேரூராட்சிகளில் 14000 அரசு கட்டிடங்கள், 24.12 லட்சம் வீடுகள், 2.34 லட்சம் வணிக மற்றும் தொழிற்சாலைகள் உட்பட 26.60 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பகுதியில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும், மழைநீர் சேகரிப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு அதிகாரிகள் தினமும் குறைந்தது 2 மணி நேரம் செலவிட வேண்டும். ரகரங்களில்,  பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அனைத்து அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், அனைத்து தொழிற்சாலைகள், பெரும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்கள், தனிக் குடியிருப்புகள், பண்னை வீடுகள், மருத்துவமனைகள், கல்யாணமண்டபங்கள், தியேட்டர்கள், கார்பரேட் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும், சாலை ஓரங்களிலும், திறந்த வெளி இடங்களிலும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டுபிடித்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் விரைவாக ஏற்படுத்த வேண்டும். 

குளங்களை சுற்றியுள்ள கட்டிடங்களில் சேகரிக்கப்படும் மழைநீர், நேரடியாக இந்த நீர் நிலைகளில் சென்று சேரும் வகையில் கட்டப்பட வேண்டும். சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டது போல அனைத்து மாநகராட்சிகள், நகராட்சி, பேரூராட்சிகளில் குழுக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டடமைப்புகள் பணிணை கண்காணிக்க வேண்டும் என இவ்வாறு பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்;  அனைத்து வகையான கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதியை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கவில்லையென்றால் நோட்டீஸ் கொடுத்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் படி அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களிலும் நீரை மறுசுழற்சி செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீரை மறுசுழற்சி செய்யும் வசதியை ஏற்படுத்தாத அடுக்குமாடி கட்டிடங்களுக்கு ஒரு வாரத்தில் நோட்டீஸ் வழங்க வேண்டும்.

இந்த நிறுவனங்களும் 3 மாதத்தில் இந்த வசதியை அமைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கும் பணிக்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். நீர் நிலைகள் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்க எம்.பி, எம்.எல்.ஏக்கள் அமைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு அவர் கூறினார்.