ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டு வருவதன் மூலம் வேலூர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது, அவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவும் குறையாது என அமைச்சர் வேலுமணி கூறினார்.

கத்திரி வெயில் முடிந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இன்னும் வெயில் குறைந்தபாடில்லை. அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் வெளியே தலைக்காட்ட முடியாமல், வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அதே நேரத்தில், வீட்டில் புழுக்கம் தாங்காமல் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, அவதியடைந்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 75 சதவீத ஏரிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அதனை அகற்ற அதிகாரிகள் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இதுவரை முடிந்தபாடில்லை. இதனால், தண்ணீர் இல்லாமல் மீதமுள்ள ஏரியின் பகுதிகள், வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

கடந்த ஆண்டு மழை காலத்துக்கு முன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வாரி சீரமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் டெண்டர் விடப்பட்டு, வேலைகளும் நடந்தன. ஆனால், மழை பெய்யாமலேயே மதகுகள் உடைந்துவிட்டன. இதனால், மழை வரும்போது, தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வேளையில், எடப்பாடி பழனிசாமி, சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்படும் என கூறினார். அதற்கு, திமுக பொருளாளர் துரைமுருகன், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தால், மாவட்டம் முழுவதும் போராட்டம் நடக்கும் என கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் வேலுமணி, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க, வேலூரில் இருந்து ரயில் மூலம் கொண்டு வருவதாக முதல்வர் அறிவித்தார். அதற்கு, திமுக பொருளாளர் துரைமுருகன், எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  இது சரியான நடைமுறை அல்ல.

அதிமுக தலைமையின் உத்தரவுபடி, தமிழகம் முழுவதும் மழைவேண்டி, கோயில்களில் சிறப்பு யாகம் நடந்து வருகிறது, அதன்மூலம், மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து, மக்களை காப்பாற்றும்.

 சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சனை உள்ளது, அதை அரசு சமாளிக்கிறது. 198 நாட்கள் மழை பொழியாமல் இருந்ததால், மக்கள் தவிக்கின்றனர். தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் கூறவில்லை.  காவிரி, கிருஷ்ணா போன்ற அணைகளில் இருந்து நீர் கேட்டு வருகிறோம்.

சென்னை நீர் பற்றாக்குறையை போக்கவே ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் நீர் கொண்டு வரப்படுகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டு வருவதன் மூலம் வேலூர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது, அவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவும் குறையாது என்றார்.