New Year Celebration: சென்னையில் நாளை இரவு 12 முதல் காலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல தடை.. காவல்துறை அதிரடி.!
மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை மக்கள் தவிரக்க வேண்டும். கடற்கரை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட கூடாது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியது. மேலும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை காவல்துறை ஏற்கனவே கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதில், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை மக்கள் தவிரக்க வேண்டும். கடற்கரை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட கூடாது.
ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அனைத்து ஓட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலமும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், DJ இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி மீறி செயல்படுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை, அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்று சென்னை காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.