வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே பஸ் நிறுத்த நிழற்குடை இல்லாததால், பயணிகள் நடுரோட்டில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். அவ்வழியாக செல்லும் வாகனங்களால், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உடனடியாக பயணிகள் நிழற்குடை அமைக் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

சென்னை அருகே வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். உயிரியல் பூங்காவுக்கு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இவ்வழியாக செல்லும் வெளியூர் பஸ்களும் நின்று செல்கின்றன.

இந்நிலையில், வண்டலூர் பூங்கா எதிரே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தின் இருபுறமும், கடந்த சில மாதங்களுக்கு முன், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், பஸ் நிறுத்தம் மற்றும் பொது கழிப்பிடம் அமைக்கவில்லை. இதனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மழை மற்றும் வெயில் நேரங்களில், நிற்க இடமில்லாமல் நடுரோட்டிலேயே கால் கடுக்க காத்திருக்கும் அவலம் உள்ளது. இதுபோல் மக்கள் நிற்கும்போது, சில நேரங்களில் அவ்வழியாக அசுர வேகத்தில் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.