சென்னை வடபழனியில் மாநகர பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை வடபழனியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் பணியாற்றும் மீனா என்ற பெண், நேற்றிரவு பணி முடிந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு செல்ல வடபழனி பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். அவர் நிலையத்துக்குள் நுழைந்து, ஓரமாக செல்ல முயன்றபோது, ஆற்காடு சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த மாநகர பேருந்து ஒன்று அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவருக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்நிலையில் விபத்து நடந்த பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால், விபத்தை ஏற்படுத்திய பேருந்து மற்றும் அதன் ஓட்டுனர் விவரம் தெரியவில்லை. இருப்பினும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.