தமிழகத்தில் படிப்பை முடித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். சிலர் அரசு தேர்வுகளுக்கு முயற்சி செய்துகொண்டும் வருகின்றனர். இந்நிலையில் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக உதவித் தொகையை கொடுக்க அரசு முன்வந்திருக்கிறது. இதன்படி இந்த உதவி தொகையை பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் அதேபோல 12ம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாயும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது சம்பந்தமாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து அவற்றை புதுப்பித்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், டிப்ளமோ, பிளஸ் 2 , இளங்கலை முடித்து தனியார் மற்றும் சுய வேலைவாய்ப்புகளில் ஈடுபடாதவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்தவர்கள் 45 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஆண்டு வருமானம்: குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.(மாதம் 6 ஆயிரம் வருமானம்)

விலக்கு:  மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித்தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.

விண்ணப்பங்களை பெற வேண்டிய முகவரி: பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள், சென்னை-4 சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் சாந்தோம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகைக்கான விண்ணப்பத்தினை பெறலாம்.

மேலும் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்ற பயனர்கள் சுய உறுதிமொழி ஆவணம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகையின் புத்தக நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.