உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும், 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு உடுமலையை சேர்ந்த சங்கரும், பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, இவர்கள் திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் சங்கர் மற்றும் கவுசல்யா பொதுமக்கள் மத்தியில் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பித்தார்.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கில் கவுசல்யாவின் குடும்பத்தினர் தான் ஆட்களை ஏவி படுகொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கவுசல்யாவின் தாய், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு, செய்யப்பட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, மரண தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். அதேபோல் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த அனைத்து வழக்குகள் மீதும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விரிவான விசாரணை நடத்தினர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், அனைத்து வழக்குகள் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. 

அதில்,  உடுமலை சங்கர் கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கவுசல்யா தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.