சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(20). அங்கிருக்கும் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்(18), தினேஷ்(18) ஆகியோரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். எங்கு சென்றாலும் மூவரும் ஒன்றாகவே செல்வர் என்று கூறப்படுகிறது. ஜெகநாதனும், தினேஷும் அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மூவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சேலையூர் அகரம்தென் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். எம்.ஜி.ஆர் நகர் அருகே வந்த போது அவர்களுக்கு முன்னால் தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதை முந்திச் செல்ல மூவரும் முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரசாந்த் மற்றும் தினேஷ் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. தலை நசுங்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஜெகநாதன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த வழக்கு பதிவு செய்த காவலர்கள், தனியார் பேருந்து ஓட்டுனர் ஏழுமலை என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு நாள் தலைமை ஆசிரியை..! அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..!