சென்னையில் இருக்கும் விருகம்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் இருக்கும் காந்தி நகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இவர்கள் திரிந்துள்ளனர்.

அங்கு சாலையோரம் நிற்கும் வாகனங்களை சேதப்படுத்தியும் அந்த வழியாக வருபவர்களை மிரட்டியும் சைக்கோ ஆசாமிகளாக செயல்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் சார்பாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு காந்தி நகர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம ஆசாமிகள் சிலர் 10 க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்துவது தெரிய வந்தது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்திருக்கும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்திநகர் பகுதியில் நடந்த கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் இந்த மர்ம நபர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.