Asianet News TamilAsianet News Tamil

ஒரே கல்வியாண்டியில் இரண்டு பட்டங்கள்... உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

ஒரே கல்வியாண்டியில்  இரண்டு பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்காத வரை அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருதமுடியாது என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

 

two degrees at same time chennai high court judgment
Author
Chennai, First Published May 21, 2021, 4:16 PM IST

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் 2013ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.இப்பணிக்கு விண்ணப்பித்த பி.ஏ. - பி.எட். படித்த ஜெகதீஸ்வரி என்பவர், ஒரே கல்வியாண்டில் ஒரு பட்டத்தை நேரடியாகவும், மற்றொன்றை தொலைதூர கல்வி மூலமும் முடித்ததாக கூறி, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதியும், மேல்முறையீடு வழக்கை இரு நீதிபதிகள் அமர்வும் தள்ளுபடி செய்தது. ஒரு பட்டத்தை தொலைதூர கல்வியிலும், இன்னொன்றை நேரடி வகுப்பிலும் படித்ததை பல்கலை கழகங்கள் அங்கீகரிக்கவில்லை என கூறி, பணி நியமனம் வழங்க முடியாது தீர்ப்பளிக்கப்பட்டது.

two degrees at same time chennai high court judgment

இதேபோல ஒரே கல்வியாண்டில் பி.ஏ. மற்றும் பி.எட். படிப்புகளை முடித்த கவிதா என்பவர் தொடர்ந்த வழக்கில், அவர் கோரிக்கையை மற்றொரு தனி நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதை  இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்து,  ஒரே ஆண்டில் படிக்க தடை விதிக்கும் வகையில் விதிகள் இல்லை என்பதால், அவருக்கு பணி வழங்க உத்தரவிட்டது.

இதற்கிடையில் இரு பட்டங்களை ஒரே ஆண்டில் படித்த, சித்ரா உள்ளிட்ட மூவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் இரு வேறு அமர்வுகள், வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக வழக்கை முழு அமர்வு விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தார். 

two degrees at same time chennai high court judgment

ஒரே கல்வியாண்டியில் இரு பட்டங்களை பெற்றவர்களை தமிழ்நாடு மேல்நிலைப் பணிகளுக்கு தேர்வு செய்ய முடியுமா என்ற கேள்விக்கு விடை காண வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி நீதிபதிகள் வி.பாரதிதாசன், எம்.தண்டபானி, பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முழு அமர்வை தலைமை நீதிபதி அமைத்தார். 

அந்த முழு அமர்வில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோது,  நேரடியாகவும், தொலைதூர படிப்பு மூலமும் ஒரே ஆண்டில் பட்டம் பெறுவதற்கு தடைவிதிக்க எந்த சட்டப்பிரிவு இல்லை என்றும், அதை காரணம்காட்டி இந்த பட்டங்களை ஏற்க முடியாது என கூற முடியாது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இரு பட்டங்களுமே அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்கள்  மூலமாக வழங்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதியை நிர்ணயிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், அதை பூர்த்தி செய்யாதவர்கள், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

two degrees at same time chennai high court judgment

பல்கலைக்கழக மானிய குழு தரப்பில், ஒரே கல்வியாண்டியில் இரட்டை பட்டப்படிப்பை அனுமதிப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், இதுசம்பந்தமான பரிந்துரை  மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகவும்,  ஒப்புதல் கிடைத்த பிறகு உரிய அறிவிப்பாணைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரே கல்வியண்டியில் பெறக்கூடிய இரு பட்டங்களை மத்திய அரசின் அனுமதிக்கும் வரை, அவை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருதமுடியாது என தீர்ப்பளித்தனர். மேலும் ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகள் போல் இல்லை, வேறு எந்த அமைச்சுப் பணியையும் ஆசிரியர் பணியுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சிறந்த ஆசிரியருக்கு முறையான பயிற்சி அவசியம் என்றும்,  அப்படிப்பட்டவர்களால் மட்டுமே சிறந்த மாணக்கர்களை உருவாக்க முடியும் என்றும், அந்த வகையில் தொலைதூர கல்வி மூலம் கல்வி பெறும் ஒருவருக்கு இந்த அனுபவங்கள் இருக்காது எனவும்  உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய அரசு அங்கீகரிக்காத வரை, இரட்டை பட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட பட்டமாக கருதமுடியாது என்ற இந்த முழு அமர்வின் முடிவை அடிப்படையாக கொண்டு, தனி நீதிபதி வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென அறிவுறுத்தி, வழக்கை தனி நீதிபதி முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios