ரயில் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து கூடுதலாக தண்ணீர் கொண்டு வந்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக தண்ணீர் ஏற்றியதால் ரயிலை இயக்க முடியாமல் ஆனது. இதற்கு, ரயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன்படி, டேங்கர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், தலா டேங்கரில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு பதிலாக 70 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதனால், ரயிலின் வேகம் குறைந்ததுடன், இழுவை சக்தியும் குறைந்தது. இதனால், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கூடுதலாக தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது தெரிந்தது.

இதற்கு ரயில்வே நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பிட்ட அளவு தண்ணீர் கொண்டு வருவதாக ஒப்பந்தம் செய்துவிட்டு, அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஏற்றியது தவறான செயல் என அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். மேலும், கூடுதலாக கொண்டு வரப்பட்ட தண்ணீரை, யாருக்கும் பயனில்லாமல், கால்வாயில் திறந்து விட்டனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையில், ஜோலார்ப்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பிற மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சனை குறித்து அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனையில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.