சூறைகாற்றில் பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டத்தின் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. தெருக்களில் மழைநீர் ஆறாக ஓடியது.

இதையொட்டி மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மரத்தின் பெரிய கிளை, திடீரென சூறைக்காற்றில் முறிந்து விழுந்தது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரத்தில் உள்ள சில மரங்கள் வேறுடன் சாய்ந்தன.

இதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிரிவு கட்டிடத்தின் எதிரே இருந்த மிக பழமையான காட்டு மரம், பலத்த காற்றில், மருத்துவமனை கட்டிடத்தின் மீது சாய்ந்தது. இதனால், கண் சிகிச்சை பிரிவில், நேற்று காலை 11 மணிவரை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.

பின்னர் நகராட்சி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கட்டிடத்தின் மீது சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு துணையாக வரும் உறவினர்கள், இரவு நேரங்களில் இந்த மரத்தின் கீழ் தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால், யாரும் அங்கு தூங்கவில்லை. இதனால், அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, பொன்விளைந்த களத்தூர், ஆத்தூர், பாலூர் ஆகிய பகுதகிளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2 மணிநேரம் பெய்த பலத்த மழையால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.