சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டிராவல்ஸ் உரிமையாளர் மறுநாளே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டிராவல்ஸ் உரிமையாளர் மறுநாளே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகவேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று வரை 37,32,865 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். ஏற்கனவே முன்களப்பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேல் இணைநோய் உள்ளவர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் 45 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை, அடையாறு மண்டலம், வார்டு 192, பகுதி 38ல் உள்ள திருவான்மியூர், கிழக்குமாட தெருவை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளரான ராமலிங்கம் கடந்த 8ம் தேதி மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பிறகு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 9ம் தேதி அவர் உயிரிழந்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே உயிரிழந்துள்ளார். தடுப்பூசியின் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்பது மருத்துவ அறிக்கை வெளிவந்த பிறகு தான் தெரியவரும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.