போக்குவரத்துத்துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் செயல்படாது என எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் கோ.வி.செழியன், போக்குவரத்துத்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின் பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கோரினார்.

அதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து துறை கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் மினி பஸ் தேவையில்லாத ஒன்று என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கிராமங்களில் உள்ள குறுகலான சாலைகளில் பெரிய பஸ்கள் செல்ல முடியாததால், மினி பஸ் சேவை துவங்கப்பட்டது. எந்த ஜென்மத்திலும் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்காது. லாப நோக்கம் பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும் என கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், பஸ்கள் அதிகம் இயங்கும் வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பஸ்கள் இயங்காத வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் முன்வராததால், 1500 பர்மிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறி விளக்கமளித்தார்.