இன்று மாலைக்குள் முழு ஊதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை அடுத்து சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை போக்குவரத்துறை என்பது ஒர சென்சிட்டிவான துறையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மாநகர பேருந்து தொழிலாளர்களுக்கு ஜூன் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படாததால், இன்று காலையில் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வடபழனி, கே.கே.நகர், அண்ணாநகர் மேற்கு உள்ளிட்ட பணிமனைகளில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. இதனால், காலையில் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

இந்நிலையில், அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் கணக்கில் போடப்பட்டுள்ளதாகவும், நேற்று விடுமுறை என்பதால் ஒரு சிலரின் வங்கி கணக்குகளில் பணம் செல்லவில்லை என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இன்று இரவுக்குள் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ஆனாலும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனைகளில் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், ஜூன் மாத ஊதியத்தில் நிலுவையில் உள்ள 38 சதவீத தொகை இன்று மாலைக்குள் செலுத்தப்படும் என்று எம்டிசி அதிகாரிகள் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.