பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டில் இருக்கும் மகாபலிபுரத்திற்கு வருகை தர இருக்கின்றனர். அங்கு இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற இருக்கின்றன.

இரு முக்கிய தலைவர்களும் சந்திக்க இருப்பதால் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரையிலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்துகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலைகள், முக்கிய இடங்கள் ஆகியவை தூய்மைபடுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

இந்த நிலையில் சீன அதிபர் சென்னை வரும் நேரத்தில் ரயில் சேவை  நிறுத்தப்படும் என்று தகவல் வந்துள்ளது. சீன அதிபர் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து இறங்கும் சமயம் கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படும். அதே போல புறநகர், விரைவு ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். தமிழக அரசு கூறும் நேரத்தில் ரயில் சேவை நிறுத்தப்படும் என்றும், அதன் பிறகு வழக்கம் போல செயல்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.