கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி இந்த மாதத்தில் நான்காம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று வீட்டை விட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாது. மருத்துவத் தேவை என்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த ஊரடங்கு நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும்.  அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே இன்று இயங்கும். இதர அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 
ஆம்புலன்ஸ், மருத்துவ சேவைகளுக்காக மட்டும் சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று காவல் துறையும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளன. விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியவர்கள், சிறு விநாயகர் சிலைகளை கரைக்க மெரினா கடற்கரைக்கு வரக்கூடும் என்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று பொதுவெளியில் நடமாடினால் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தமிழகமே வெறிச்சோடி காணப்படுகிறது.