திடீரென கொட்டிய மழையால்  சாலைகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேல் மழை கொட்டியது. இதனால், சென்னை நகர் முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

எதிர்பாராமல் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வங்கக் கடலில் உள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. நேற்று காலை அந்த காற்று சுழற்சி தமிழக கடலோரத்துக்கு நெருங்கி வந்தது. இதன் காரணமாக காலை 11 மணிக்கு சென்னையிலும் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து, இடைவிடாத கனமழையாக தொடர்ந்தது. திடீரென கொட்டிய மழையால் சாலைகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேல் மழை கொட்டியது. இதனால், சென்னை நகர் முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

மயிலாப்பூர், அடையாறு, தி.நகர், கோட்டூர்புரம், எழும்பூர், சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி பெரியார் நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை, 100 சாலை என நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கிய சில இடங்களில் வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதே நிலைதான் சென்னை புறநகர் பகுதியில் காணப்பட்டது. அங்கும் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை 6 மணி வரை இடைவிடாமல் பெய்த மழையால் அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்பியவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினர். அதே நேரத்தில் இரவும் தொடர்ந்து பெய்த மழையால் வாகனங்கன் அனைத்தும் ஊர்ந்து சென்றன. பல மணி நேரமாக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அணிவகுத்து நின்ற காட்சியை காணமுடிந்தது. இதுதவிர கெங்குரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப் பாதைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்த 4 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டன. கனமழையால் முடங்கிய சாலைப் போக்குவரத்து காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். அதிகளவில் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் குவிந்ததால் நள்ளிரவு 12 மணி வரை சேவை நீட்டிக்கப்பட்டது. இதேபோல விடைவிடாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்தது. 

இந்நிலையில், எதிர்பாராமல் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.