கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி மக்கள் வீட்டை வீட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 

சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் வருகிற 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகளில் பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது.  அலுவலகம் செல்பவர்கள் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை மற்றும் இ-பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று எவ்வித தளர்வுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர, வேறு எவ்விதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அப்படி பொதுமக்கள் வீட்டில் இருந்து இன்று வெளியே வந்து தேவையில்லாமல் சாலையில் நடந்து சென்றால் உடனடியாக கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் மக்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் வாகன ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் காமிரா மூலம் அனைத்து தெருக்களும் கண்காணிக்கப்படுகிறது.