டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு செய்து தலைமறைவாக இருந்து வந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் பல்வேறு முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 8 பேருமே அரசு ஊழியர்கள். குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி என்பது குறித்து இவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தனர். அதாவது, குரூப் 4 தேர்வில் எளிதில் அழியக்கூடிய பேனாவை வைத்து மோசடியில் ஈடுபட்டதைப் போல், குரூப் 2ஏ தேர்விலும் விடைத்தாளை மாற்றி இணைத்து மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

ராமேஸ்வரத்தில் தேர்வு எழுதியவர்கள் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள் முதல் 20 கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுதியுள்ளனர். மற்ற கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. இதை குறியீடாக வைத்து, ஜெயக்குமார் என்பவரின் தலைமையில் இருக்கக்கூடிய மோசடி கும்பல், மீதமுள்ள விடையை நிரப்பியுள்ளது. இதனால் 42 பேரும் தேர்ச்சி பெற்று வேலை வாங்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குற்றவாளியாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெக்குமார், மற்றும் ஆயுதப்படை காவலர் சித்தாண்டி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். ஜெயக்குமார் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சித்தாண்டிக்கு சொந்தமான தோட்டத்தில் அவர் பதுங்கி இருந்த போது சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தற்போது அவரை சென்னை கொண்டு வருகின்றனர். இவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் பல்வேறு முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.