கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் குறித்து அதிரடி அறிவிப்பு... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை...!
3 வகையாக கொரோனா நோயாளிகளை பிரித்து, அதற்கான டிஸ்சார்ஜ் நடைமுறைகளை மருத்துவ சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 3 வகையாக கொரோனா நோயாளிகளை பிரித்து, அதற்கான டிஸ்சார்ஜ் நடைமுறைகளை மருத்துவ சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
லேசானது முதல் அறிகுறி இல்லாதது வரையிலான நோயாளிகளுக்கு 10 நாட்களுக்குப் பிறகும் எவ்வித பாதிப்புகளும் கண்டறியப்படாத பட்சத்தில் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம். இல்லையெனில் லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நோயாளிகள் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு கொரோனா மையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர்களை 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கலாம், அதன் பின்னர் 10 நாட்கள் கழித்து அவர்களை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களாக அறிவிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மிதமான அறிகுறி இருக்கக்கூடிய நோயாளிகளை 10 நாட்கள் சிகிச்சைப்பிறகு டிஸ்சார்ஜ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு வகை நோயாளிகளும் டிஸ்சார்ஜுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான நோய் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு மட்டுமே டிஸ்சார்ஜுக்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை 3 ஆக பிரித்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவையில்லை என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைகளின் படி மருந்துக்களை எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் அளவு 94க்குள் இருந்தால் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், ஆக்ஸிஜன் அளவு 90க்கு கீழ் இருந்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.