புறநகர் பகுதியில் பெயின்டிங் வேலை செய்வது போல் நடித்து, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரவில் கொள்ளையடித்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குன்றத்தூர் சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் மாலை குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆட்டோவை மடக்கி, அதில் வந்த 3 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு, உள்ளே நகைகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களை குன்றத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரித்தனர்.

விசாரணையில், சென்னை ஓட்டேரி, சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த முருகன் (36), எஸ்.வி.நகரை சேர்ந்த பிரான்சிஸ் (28) மற்றும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த செல்வம் (32) என தெரியவந்தது. இவர்கள் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் பெயின்டிங் வேலை செய்வது போல் நடித்து, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் ஆட்டோவில் வந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகவும், அப்பணத்தில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நேற்று காலை 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.