ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது . வருடத்தின் எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் . உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் பக்தர்களால் கொண்டாடப் படுகிறார் .

இங்கு தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் . இதன்காரணமாக தமிழகத்தின் சென்னையில் மிக பெரிய அளவில் திருப்பதியை போன்று ஏழுமலையான் கோவிலை கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது சம்பந்தமான முடிவு எடுக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பேச இருப்பதாக தேவஸ்தான வட்டாரங்கள் கூறுகின்றன .

கோவில் கட்டுவதற்கான நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆந்திர அரசு முறைப்படி தமிழக அரசிடம் பேசும் என்று எதிர்பார்க்க படுகிறது .இது குறித்து சென்னை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தின் தலைவர் கிருஷ்ணராவ் கூறும்போது , "ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருப்பதி கோவில் கட்ட சென்னையில் நிலம் ஒதுக்குவதாக தெரிவித்திருந்தார் .தற்போது மீண்டும் அதே கோரிக்கையை வைக்க இருக்கிறோம்" என்று கூறினார் . 

திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில் ஒன்று கட்டப்பட்டு சமீபத்தில் தான் குடமுழுக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது .